ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் கடந்த முறையை (2023 ஹாங்சோ விளையாட்டுப் போட்டி) விட குறைந்த அளவிலான பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் கைப்பற்றியுள்ளனர். பதக்க எண்ணிக்கை குறைந்தது ஏன் என்பது தொடர்பாக விளையாட்டு விமர்சகர்கள் கேள்விக் கணைகளை எழுப்பியுள்ளனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டாலும், இம்முறை 85 பதக்கங்களை (21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம்) மட்டுமே வென்றுள்ளது. இது கடந்த முறை வென்ற 106 பதக்கங்களை விட 21 பதக்கங்கள் குறைவாகும். குறிப்பாக 7 தங்கப் பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் குறைவாக வென்றுள்ளனர்.
இம்முறை துப்பாக்கிச் சுடுதல் மற்றும் தடகளப் போட்டிகளில் எதிர்பார்த்த அளவுக்கு பதக்கங்கள் வரவில்லை என்பதே உண்மை. துப்பாக்கிச் சுடுதலில் கடந்த 2023-ல் 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை(22 பதக்கம்) வென்று அசத்திய நிலையில், இம்முறை 15 பதக்கங்களை (3 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலம்) மட்டுமே கைப்பற்றியது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் பதக்கம் ஏதுமின்றி வெளியேறிய நிலையில், இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாகர் பதக்கம் வெல்லாமல் ஏமாற்றினார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிப் பிரிவில் சுருச்சி சிங், கமல்ஜீத் ஆகியோர் அடங்கிய ஜோடி மட்டுமே தங்கம் வென்றது.


