Some Populer Post

  • Home  
  • ’மலையக மக்களை இழிவுபடுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை’
- Sri Lanka

’மலையக மக்களை இழிவுபடுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை’

மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 8, 2026) நடைபெற்ற ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் வடக்கு – கிழக்கில் திலீபனின் சிலை தொடர்பான பிரச்சினை எழுந்தபோது, […]

மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 8, 2026) நடைபெற்ற ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவிக்கையில்,
“அண்மையில் வடக்கு – கிழக்கில் திலீபனின் சிலை தொடர்பான பிரச்சினை எழுந்தபோது, அனுராதபுரத்தில் உள்ள தேசிய பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில்,

‘இந்த நாட்டுக்குக் கழிவறைகளைக் கழுவவும் தேயிலை பறிக்கவும் வந்த மக்கள் இந்தப் பிரச்சினை பற்றிப் பேசக் கூடாது’ என்று தெரிவித்திருந்தார். குறித்த ஆசிரியரின் அறியாமை தொடர்பில் வெட்கப்பட வேண்டும். அவர் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு சமூகத்தைக் கேவலப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் நாங்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த விடயத்தில் கட்டாயம் நாங்கள் பாடம் கற்பித்துக் கொடுக்க வேண்டும். எந்த நபரையும் அவரின் பிறப்பு, இனம் மற்றும் வேலை ஆகியவற்றின் அடிப்படையில் இழிவுபடுத்த இடமளிக்கக் கூடாது.

இதேவேளை, இந்தப் பிரச்சினை முடிவதற்குள், லவர்சிலீப் தோட்டத்தில் உதவி முகாமையாளர் அங்குள்ள குடும்பமொன்றைப் பார்த்து ‘கள்ளத்தோனி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். இந்த வார்த்தை எப்படி வந்தது என்று பார்க்க வேண்டும். இந்த நாடு சுதந்திரமடையும் வரை நாங்கள் தொழிலாளர்களாகவே அழைத்து வரப்பட்டோம். தமிழ்நாடு, கேரளா போன்ற பிரதேசங்களிலிருந்து கொண்டுவரப்பட்டனர். அப்போது காடுகளை நாடாக்கி, மலைகளுக்குள் பாதைகளை உருவாக்கி, தேயிலை செடிகளையும் நட்டோம். இவற்றைச் செய்த எங்களுக்குக் கள்ளத்தோனி என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. வரலாற்றை எடுத்துப் பார்த்தால் கள்ளத்தோனியில் யார் வந்தது என்று அனைவருக்கும் தெரியும்.

மலையகத் தமிழர்கள் தேயிலை பறிக்கின்றனர்; அது 7, 8 சதவீதமாகவே அமையும். அந்த மக்கள் செய்யும் தொழில் முழு சமூகத்திற்கும் அடையாளமாக இருக்கின்றது. அவர்களுக்குக் காணி உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஏதாவது பிரச்சினைகள் வரும்போது ‘கழிவறை கழுவ வந்தவர்கள்’, ‘தேயிலை பறிக்க வந்தவர்கள்’, ‘கள்ளத்தோனிகள்’ என்றெல்லாம் கூறுகிறார்கள். எவராக இருந்தாலும் மதம், கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு அசிங்கப்படுத்துவது தவறாகும்.

நாங்கள் எங்கிருந்து வந்துள்ளோம் என்று கூறுவதற்கு நீங்கள் யார்? உங்களுக்குள்ள அதே உரிமையே எங்களுக்கும் உள்ளது. தேயிலை பறிப்பவர்களுக்குக் கொடுக்கப்படும் மரியாதையைத் தேயிலைத் தண்ணீரைக் குடிப்பவர்களுக்கு வழங்கினால் நாடு ஏற்றுக்கொள்ளுமா? ஒரு காலத்தில் சுற்றுலாத்துறையும் கிடையாது, அந்நியச் செலாவணியும் கிடையாது; தேயிலை மட்டுமே இந்த நாட்டைக் காப்பாற்றியது. இப்படியான மக்களுக்குக் கிடைக்கும் மரியாதை ‘கள்ளத்தோனி’ என்பதா? இது மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினையாகும். ஒரு அடிப்படை மரியாதை எங்களுக்குக் கிடைக்காவிட்டால் எப்படி? நாங்கள் நூற்றாண்டு காலமாக இருக்கிறோம்; இலங்கை வரலாற்றில் எனது முன்னோரும் இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் எங்களை வந்தேறிகள் என்று கூறுவதற்கு உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? ஒவ்வொரு தேயிலை செடியிலும் எமது முன்னோரின் கைரேகைகள் உள்ளன.

மலையக மக்கள் நிறைய விடயங்களை விட்டுக்கொடுத்துப் பழகிவிட்டனர். நாட்டுக்கு நல்ல தலைவர் கிடைத்துவிட்டார் என்று கருதி மலையக ஆளுமையை விட்டுக்கொடுத்துள்ளனர். இந்த விடயங்களில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.