Some Populer Post

  • Home  
  • ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை இலாபமீட்ட செய்ய 5 ஆண்டு திட்டம்
- Sri Lanka

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை இலாபமீட்ட செய்ய 5 ஆண்டு திட்டம்

ஸ்ரீலங்கன் விமான சேவை எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடி, அதிகளவிலான விமானப் பயணத் தாமதங்கள், கடன் சுமை மற்றும் புதிய விமானங்களைக் கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள கொள்வனவு நடைமுறைத் தாமதங்கள் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறித்த குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது 23 விமானங்களைக் கொண்டுள்ள விமானச் […]

ஸ்ரீலங்கன் விமான சேவை எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடி, அதிகளவிலான விமானப் பயணத் தாமதங்கள், கடன் சுமை மற்றும் புதிய விமானங்களைக் கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள கொள்வனவு நடைமுறைத் தாமதங்கள் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறித்த குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

தற்போது 23 விமானங்களைக் கொண்டுள்ள விமானச் சேவையின் விமானத் தொகுதி போதுமானதாக இல்லாமை மற்றும் அந்த விமானங்கள் சுமார் 12 வருடங்கள் பழைமையானவையாக இருப்பதால் விமானப் பயணங்களைப் பாதிக்கும் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் தாமதங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

ஒரு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு அல்லது வேறு காரணங்களால் தாமதம் ஏற்படும்போது, மாற்று விமானங்களைப் பயன்படுத்துவதில் காணப்படும் மட்டுப்பாடுகள் காரணமாக ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்து வலையமைப்பும் பாதிக்கப்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

விமானங்களைக் கொள்வனவு செய்வதற்காக கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட வழமையான கொள்வனவு நடைமுறைகள் தோல்வியடைந்தமை மற்றும் அதனுடன் தொடர்புடைய நீண்டகாலத் தாமதங்கள் குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிலைக்குத் தீர்வாக விமானங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான விசேட கொள்வனவு வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை வர்த்தமானியில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், கொள்வனவு நடவடிக்கைகளை நேரடியாகக் கண்காணிப்பதற்காக அமைச்சு மட்டத்தில் விசேட கொள்வனவுப் பிரிவொன்றும் நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

புதிய கொள்வனவு வழிகாட்டுதல்களின் கீழ் விமானத் தொகுதியை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜூன் மாதமளவில் புதிய குறுகிய உடற்பகுதியைக் கொண்ட (Narrow-body) விமானமொன்றையும், அகன்ற உடற்பகுதியைக் கொண்ட (Wide-body) இரண்டு விமானங்களையும் விமானத் தொகுதியில் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் கலந்துரையாடப்பட்டது.

2029ஆம் ஆண்டளவில் விமானத் தொகுதியை ஆகக்குறைந்தது 29 விமானங்களாக அதிகரிப்பது ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்காகும் என்றும் குறிப்பிடப்பட்டது.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக, பழைய வங்கிக் கடன்கள் மற்றும் பிணைமுறிக் கடன்கள் உள்ளிட்டவற்றைப் பொறுப்பேற்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை திறைசேரி முன்னெடுத்துள்ளதாக இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன், விமானங்களுக்கான குத்தகைக் கட்டணங்களைக் குறைத்தல், எரிபொருள் செலவுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் விமான சேவையின் வருமானத்தை அதிகரிப்பதற்கான வர்த்தக உபாயங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி நிலைமை, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் சர்வதேச விமான சேவைகளுடனான போட்டித்தன்மை ஆகியனவும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் செயற்பாடுகள் மற்றும் வருமானத்தில் தாக்கம் செலுத்துவதாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும், ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு, புதிய முதலீட்டாளர்களைப் பெற்றுக்கொள்ளுதல், அரச-தனியார் பங்காண்மையை ஏற்படுத்துதல் அல்லது அரசாங்கத்தின் கீழ் தொடர்ந்து நிர்வகித்து, அதன் செலவுகளை ஈடுகட்டக்கூடிய நிலைக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட மாற்று வழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் ஸ்ரீலங்கன் விமான சேவையை அதன் செலவுகளை ஈடுகட்டக்கூடிய நிலைக்குக் கொண்டுவருவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடங்கிய விரிவான அறிக்கையொன்றை நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்திற்கும் அமைச்சுக்கும் சமர்ப்பிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.