அநுராதபுரத்தில் பிக்குகளை சிங்கங்கள் போல் தாக்கி ஜீப் வண்டிகளில் ஏற்றிச் செல்லும் பொலிஸார் யாழ்ப்பாணத்தில் நாய்கள் போன்று நடக்கின்றனர். விடுதலைப் புலி பயங்கரவாதிகளின் நினைவு தினத்தை நடத்துவதற்கு இடமளித்துவிட்டு இந்த அரசாங்கம் பார்த்துக்கொண்டிருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட எம்.பி.யான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (28) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நிகழ்வுகள் பல நடைபெற்று வருகின்றன. முதலில் திலீபனின் நினைவு தினத்தில் ஆரம்பித்தது. திலீபன் என்பவர் விடுதலைப் புலி பயங்கரவாதி . அவரின் நினைவு தினத்தை நடத்துவதற்கு இடமளித்து இந்த அரசாங்கம் பார்த்துக்கொண்டிருந்தது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த யாழ். மாநகரசபை உறுப்பினர் ஒருவரே இதற்கான அனுமதியை பெற்றுள்ளார்.நகர மேயர் இதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கினார்.இது தொடர்பில் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இறந்தவர்களை நினைவு கூருவதற்கு எவருக்கும் உரிமை உள்ளது. அதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால் இங்கு முழுமையாக பயங்கரவாத விடுதலைப் புலிகளையே நினைவுகூருகின்றனர். இரண்டு வாரங்களின் பின்னர் அந்த திலீபனின் சிலையை பொலிஸார் எடுத்துச் சென்றனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும். மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட வேண்டும். ஆனால் இதுவரையில் எதுவும் செய்யப்படவில்லை.
இதேவேளை கடந்த வாரம் நூற்றுக்கு 80 வீதத்திற்கும் அதிகமான இடங்களில் பிரபாகரன் நினைவுகூரப்பட்டுள்ளார். இந்த மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ், அநுரகுமார மற்றும் பிரபாகரன் ஆகியோர் இந்த மாதத்திலேயே பிறந்துள்ளனர். இந்த நாட்டை மீட்டெடுத்தவர்கள், காட்டிக்கொடுத்தவர்கள் மற்றும் மீண்டும் விடுதலைப் புலிகளை எழுப்பிவிடுபவர்கள் இவர்களிடையே இருக்கின்றனர். அந்த நினைவுகூரல்களின் போது விடுதலைப் புலி சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கார்த்திகை பூ என்பது விடுதலைப் புலிகளின் சின்னம். தடை செய்யப்பட்ட அமைப்பின் சின்னத்தை பயன்படுத்துவது சட்டவிரோதம். ஈழக் கொடி, ஈழ வசனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அநுராதபுரத்தில் பிக்குகளை தாக்கி ஜீப்களில் பொலிஸார் ஏற்றிச் செல்கின்றனர். இங்கு அவர்கள் சிங்கங்கள் போன்று செயற்படுகின்றனர்.ஆனால் யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸார் நாய்கள் போன்று ஆகியுள்ளனர். இவ்வாறு இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம். துரைராசா உரையாற்றும்போது, வடக்கில் விகாரைகளுக்கு கீழ் மனித புதைகுழிகள் இருப்பதாக தெரிவித்தார். அவரை கைது செய்து இதுதொடர்பில் விசாரணை நடத்த வேண்டும். அதேபோன்று தமிழ் மக்களின் சடலங்கள் ராணுவ முகாம்களில் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எவ்வாறு அவ்வாறு தெரிவிக்க முடியும்.? அதனால் இனவாத கருத்துக்களை தெரிவித்து, மீண்டும் நாட்டுக்குள் இனவாதத்தை தூண்ட வேண்டாம்.
அதேபோன்று என நண்பன் சுமந்திரன், சிறிதரன் போன்றவர்கள் பிரபாகரன் உள்ளிட்ட புலி தலைவர்களை அவர்களின் பதவிகளை குறிப்பிட்டு கதைக்கிறார்கள். அவ்வாறு செயற்பட முடியுமா? அவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்ன என கேட்கிறேன் என்றார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய இலங்கை வன்னிமாவட்ட எம்.பி .துரைராசா ரவிகரன் , வட்டுவாகல் என்பது சைவ கிராமம். அங்கு சிங்கள மக்கள் கிடையாது. ஆனால் பெரிய விகாரை கட்டப்பட்டுள்ளது. அங்கு காணாமலாக்கப்பட்ட உறவுகள் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கின்றனர். நியாயமான போராட்டங்களே அவை. அந்த மக்கள்,காணாமல் போன தமது உறவுகளின் உடல்களுக்கு மேலேயே விகாரைகள் கட்டபட்டுள்ளதா என்றே சந்தேகிக்கின்றனர். எனவே அந்த விகாரையை உடைக்கத் தேவையில்லை. நவீன கருவிகளை கொண்டு அதனை சோதனை செய்து பாருங்கள், உங்களுக்கு இது நியாயமானது என்றால் அதனை செய்யுங்கள். இல்லாவிட்டால் விகாரையின் கீழே மனித உடல்கள் இருக்கின்றன என்றுதான் நம்ப வேண்டியிருக்கும் என்றார்.


