மியன்மார் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், திருமண நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் பாடசாலை உள்ளிட்ட பகுதிகளில் பல டசின் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
தெற்கு ஷான் மாநிலத்தில் உள்ள மோ பை (Moe Bye) கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றின் மீது சனிக்கிழமை (28) பிற்பகல் நடத்தப்பட்ட தாக்குதலில், குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் மீட்புப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், எதிர்ப்புப் படைகள் தீவிரமாகச் செயற்படும் மத்திய மியன்மாரின் மக்வே (Magway) பிராந்தியத்தில் உள்ள இன் யோன் (In Yon) கிராமப் பாடசாலை மீது வியாழக்கிழமை (26) நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மாணவர்கள், இளம் துறவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்படக் குறைந்தது 20 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மியன்மாரின் நாடு கடந்த தேசிய ஐக்கிய அரசாங்கம் (NUG) தெரிவித்துள்ளது.
இத்தாக்குதல்கள் குறித்து மியன்மாரின் இராணுவ ஆட்சி நிர்வாகம் இதுவரை எவ்விதக் கருத்தையும் வெளியிடவில்லை.
மேற்கு மியன்மாரின் ரக்கைன் (Rakhine) மாநிலத்தில் உள்ள மிரௌக்-யு (Mrauk-U) நகரிலும் சனிக்கிழமை (28) மாலை இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 8.00 மணியளவில் (13:30 GMT) நகரின் குடியிருப்புப் பகுதி மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில், 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பகுதி, நாட்டின் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடும் மிகவும் பலம்வாய்ந்த இன ஆயுதக் குழுக்களில் ஒன்றான அரக்கான் இராணுவத்தின் (AA) கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
2021ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவப் புரட்சியில், முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சிவில் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் நீண்டகால உள்நாட்டுப் போர் நிலவி வருகின்றது. அன்றிலிருந்து நாடு முழுவதும் கிட்டத்தட்ட நாளாந்தம் இராணுவ வான்வழித் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
தேசிய ஐக்கிய அரசாங்கம் (NUG) மற்றும் இன ஆயுத அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள் உட்பட, தன்னால் கட்டுப்படுத்த முடியாத பகுதிகள் மீது இராணுவம் தரைவழித் தாக்குதல்களை நடத்துவதுடன் கிராமங்களையும் தீயிட்டுக் கொளுத்தி வருகின்றது.
ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக மியன்மார் இனப்படுகொலை புரிந்ததாகச் சர்வதேச நீதிமன்றம் (ICJ) தீர்ப்பளித்து ஒரு வாரத்தின் பின்னரே இந்தப் புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், 7 இலட்சத்திற்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். எனினும், ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே தமது படைகள் செயற்பட்டதாகக் கூறிய மியன்மார், இனப்படுகொலைக் குற்றச்சாட்டை மறுத்திருந்தது. சர்வதேச நீதிமன்றம் ஒன்றினால் அரசொன்று இனப்படுகொலை செய்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இத்தீர்ப்பு அமைந்தமை குறிப்பிடத்தக்கது.


