இதுவரை இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாரிய மனிதப் புதைகுழிகளில் அவற்றின் அளவில் மூன்றாவது இடத்தைப் பெறும் மனிதப் புதைகுழி தொடர்பாக, கடந்த பதினொரு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு காணாமற்போனோரின் உறவினர்கள் குழுவொன்று விடுத்த கோரிக்கையைப் பரிசீலிக்க மாத்தளை மேல் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளையும் வழக்கு தொடர்பான நடவடிக்கைகளையும் மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரி, நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர், காணாமற் போனோரின் குடும்பங்களின் ஒன்றியத் தலைவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ப்ரிட்டோ பெர்னாண்டோ தலைமையில், நவம்பர் 11ஆம் திகதி காலை மாத்தளை நகரில் அமைதியான போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


