கொரியத் தமிழ்ச் சங்கம், கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழ் ஆய்வு மையம் மற்றும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய ‘முதலாம் பன்னாட்டு இந்திய – தமிழ் – கொரிய ஆய்வு மாநாடு 2026’, கொரியத் தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கும் விழா மற்றும் வி.ஜி.பி.
உலகத் தமிழ்ச் சங்கத்தின் 205-ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள், தென் கொரியாவின் டேஜான் (Daejeon) நகருக்கு அருகிலுள்ள ஓசோங் (Osong) அரங்கில் அண்மையில் கோலாகலமாக நடைபெற்றன.இதுவரை உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் 204 திருவள்ளுவர் சிலைகளை நிறுவியுள்ள வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் செவாலியர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் அவர்கள், 205-ஆவது திருவள்ளுவர் சிலையினைத் தென் கொரிய மண்ணில் திறந்து வைத்தார்.
இவ்விழாவில், தென் கொரியாவிற்கான இந்தியத் தூதரக அதிகாரி சுரேஷ் குமார், சுங்சொங்புக்தோ பயோ சி.எஸ். மையத்தின் தலைவர் புரவலர் லியூ ஜெ யொங், சுங்ஜூ மாகாணக் கல்வியாளர் கிம் தோக்யோ, மேனாள் இலண்டன் மேயர் அப்பு தாமோதரன், சென்னையின் புகழ்பெற்ற மருத்துவர் சொக்கலிங்கம், பேராசிரியர் உலகநாயகி பழனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
மேலும், கொரியத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் அரவிந்த ராஜா, நிறுவனத் தலைவர் முனைவர் இராமசுந்தரம், முனைவர் மோ. பாட்டழகன், துணைத் தலைவர் தெ. விஜயலட்சுமி, பொருளாளர் பீ. ஜெரோம், செயலாளர் முனைவர் செலஸ்டின் ராஜா, இந்தியத் தொடர்பாளர் முனைவர் பிரபாகரன் ஆகியோருடன் பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.இந்நிகழ்வின் ஒரு பகுதியாக ஆய்வரங்கம், கலையரங்கம் மற்றும் மரபு நடைப்பயணம் ஆகியவையும் இடம்பெற்றன.
விழாவில் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் உரையாற்றுகையில், “‘தொழில் செய்து தொண்டு செய்வோம்’ என்ற நோக்கில் உலகெங்கும் திருவள்ளுவர் சிலைகளை நிறுவி, தமிழ் மொழியினை வளர்த்து வருகின்றோம்.
இன்று 205-ஆவது சிலையினைத் தென் கொரிய மண்ணில் நிறுவுவதையெண்ணிப் பெருமை கொள்கிறேன். அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலைக் கொடுத்த வள்ளுவரது நெறிகளைக் கைக்கொண்டு, மதத்திற்கு அப்பாற்பட்ட பொதுமறையாகத் திருக்குறளைப் போற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டார்.இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைச் சங்க நிர்வாகிகளும், பன்னாட்டுத் தொடர்பாளர் தாமோதரனும் இணைந்து சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.


