Some Populer Post

  • Home  
  • செம்மணி விவகாரம் தொடர்பில் சோமரத்ன ராஜபக்ஷ வாக்குமூலத்தில் தீர்வைத் தேடுக!
- Chemmani News - Sri Lanka

செம்மணி விவகாரம் தொடர்பில் சோமரத்ன ராஜபக்ஷ வாக்குமூலத்தில் தீர்வைத் தேடுக!

வடக்கில் இடம்பெற்ற காணாமல்போனோர் விவகாரத்திற்குப் பிரதான தீர்வாக, செம்மணி விவகாரம் தொடர்பில் கைதியாகவுள்ள முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வுகளைத் தேட வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், பயிரிடப்படாத தரிசு நிலங்களை மலையக மக்களுக்கு வழங்குவதாகத் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ‘ஹட்டன் பிரகடனம்’ மூலம் உத்தரவாதம் வழங்கப்பட்டதாகவும், இன்று அந்தக் காணிகளைத் தனியார் கம்பனிகளுக்கு வழங்க அரசாங்கம் முடிவு […]

வடக்கில் இடம்பெற்ற காணாமல்போனோர் விவகாரத்திற்குப் பிரதான தீர்வாக, செம்மணி விவகாரம் தொடர்பில் கைதியாகவுள்ள முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வுகளைத் தேட வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், பயிரிடப்படாத தரிசு நிலங்களை மலையக மக்களுக்கு வழங்குவதாகத் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ‘ஹட்டன் பிரகடனம்’ மூலம் உத்தரவாதம் வழங்கப்பட்டதாகவும், இன்று அந்தக் காணிகளைத் தனியார் கம்பனிகளுக்கு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் சாடிய அவர், இது மோசமான துரோகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற ஏற்றுமதி பொருளாதாரம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சாடினார்.

அவர் மேலும் பேசுகையில்:

“ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன். அதில் 15 பிரதான விடயங்களைச் சுட்டிக்காட்டி அவற்றுக்கான தீர்வையும் கோரியுள்ளேன். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில், கம்பனிகள் தொழிலாளர்களையும் ஜனாதிபதியையும் ஏமாற்றியுள்ளன. கம்பனிகள் தொழிலாளர்கள் கொண்டுவரும் தேயிலைக் கொழுந்து நிறை, இறப்பர் நிறை ஆகிய இரண்டையும் உயர்த்தியுள்ளன. நமது தொழிலாளர்கள் பணிசெய்வது கம்பனிகளில் மட்டுமல்ல; அரச தோட்டங்கள், தனியார் தோட்டங்கள், சிறு தோட்ட உடைமைத் தோட்டங்கள் ஆகிய நான்கு துறைகளிலும் ஒரே வேலையைச் செய்வதால், ஒரே சம சம்பளத்திற்குச் சட்டபூர்வ அந்தஸ்து வழங்க வேண்டும். ‘ஒரு நாள் சம்பளத் தொகைக்குக் கொழுந்து, இறப்பர் நிறை எவ்வளவு?’ என்பவற்றை குறிப்பிட்டு, சம்பள நிர்ணய சபையில் தீர்மானித்து அவற்றுக்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிட வேண்டும்.

பெருந்தோட்டங்களில் வாழும் திருமணமான ஒவ்வொரு குடும்பத்திற்கும், அவர்கள் தோட்டங்களில் வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும், 200 வருடங்களாக அவர்கள் அளித்துள்ள பங்களிப்பையும் கருத்தில் கொண்டு, வதிவிடக் காணியாகக் குறைந்தபட்சம் 15 பேர்ச் என்ற ‘மலையக வதிவிடக் காணிக் கொள்கையை’ அறிவிக்க வேண்டும்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் பெருந்தோட்டங்களில் இந்திய – இலங்கை நிதி உதவியினால் கட்டப்போகும் தனி வீடுகள் எத்தனை? இந்திய – இலங்கை நிதி உதவியினால் பெருந்தோட்டங்களில் மலைகளில் கட்டப்படவிருக்கும் வீடுகள் தொடர்மாடி வீடுகள் அல்ல; அவை காணி உரிமையுடன் கூடிய தனி வீடுகள்தான் என்பதை அறிவிக்க வேண்டும்.

பயிரிடப்படாத தரிசு நிலங்களை மலையக மக்களுக்கு வழங்குவதாகத் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ‘ஹட்டன் பிரகடனம்’ மூலம் உத்தரவாதம் வழங்கப்பட்டது. இன்று அந்தக் காணிகளைத் தனியார் கம்பனிகளுக்கு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது மோசமான துரோகம்! இதனை உடனடியாக நிறுத்தி, தரிசு நிலங்களை மலையக இளைஞர்களுக்குப் பிரித்து வழங்கும் ‘மலையக வாழ்வாதாரக் காணிக் கொள்கையை’ அறிவிக்க வேண்டும்.

‘டித்வா’ பேரழிவினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கண்டி, பதுளை, நுவரெலியா பெருந்தோட்ட மக்கள் கணிசமானோர் இன்னமும் தற்காலிக முகாம்களில் வாழ்கின்றனர். இவர்களுக்கு நீதி எங்கே? மலையக ‘டித்வா’ அகதிகளின் மறுவாழ்வு தொடர்பில் உங்களது கொள்கையை உறுதியாக அறிவிக்க வேண்டும்.

சமூக – பொருளாதார வளர்ச்சிப் புள்ளியியல் விபரங்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்ற அடிப்படையில், பெருந்தோட்ட மக்களுக்கான கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு ஆகிய துறைகளுக்கான விசேட நிவாரண ஒதுக்கீட்டுத் தொகையை வெளிப்படுத்த வேண்டும்.

சமூக – பொருளாதார வளர்ச்சிப் புள்ளியியல் விபரங்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்ற நிலையிலிருந்து விசேட நடவடிக்கைகள் மூலம் மலையக மக்களைக் கைதூக்கிவிட நாம் சட்டப்படி உருவாக்கிய ‘நவீடா’ என்ற மலையக அபிவிருத்திச் சபையைக் கலைக்கமாட்டோம் என உறுதியளிக்க வேண்டும்.

இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், ‘புதிய அரசியலமைப்பு உருவாக்கம்’ என்ற உங்களது உறுதிமொழிக்கு என்ன ஆனது? ஒரு வருட அவகாசத்தில் நீங்கள் நடத்துவதாகச் சொன்ன மாகாண சபைத் தேர்தல் என்ன ஆனது? நல்லெண்ண மன்னிப்பில் விடுவிப்பதாகச் சொன்ன நீண்டகாலத் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் மறக்கடிக்கப்பட்டதா?

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக அகற்றுவோம் என எங்களுடன் சேர்ந்து ஜனாதிபதியும் போராடினார். இப்போது மோசமான மாற்றுச் சட்டத்தைக் கொண்டுவர முயல்கிறீர்கள். இனிப் புதிய சட்டமோ, திருத்தமோ வேண்டாம். புதிய சட்ட வரைபையும் பழைய சட்டத்தையும் முழுமையாக அகற்ற வேண்டும்.

விடுவிப்பதாக உறுதி அளித்த, வடகிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணிகள் விவகாரத்திற்கு என்ன ஆனது? வடக்கில் இடம்பெற்ற காணாமல்போனோர் விவகாரத்திற்குப் பிரதான தீர்வாக, செம்மணி விவகாரம் தொடர்பில் கைதியாகவுள்ள முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வுகளைத் தேட வேண்டும்.

மலையக மக்களுக்குக் காணி உரிமையே உறுதியானது. காணி உரித்து கிடைத்தால்தான் அந்த மக்களின் குடியுரிமை உறுதியாகும். முதலில் காணியை வழங்குங்கள். வசதி இல்லாதவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு நிதி வழங்குவது பற்றி அரசாங்கம் ஆராயலாம்; இந்தியாவின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளலாம். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில் இவற்றுக்குத் தீர்வை எதிர்பார்த்துள்ளேன்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.