Some Populer Post

  • Home  
  • தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனாலேயே ராஜபக்‌ஷ அரசியலை நிறுத்த முடியவில்லை – பொதுஜன பெரமுன
- Sri Lanka

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனாலேயே ராஜபக்‌ஷ அரசியலை நிறுத்த முடியவில்லை – பொதுஜன பெரமுன

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாலும் ராஜபக்‌ஷ அரசியலை நிறுத்த முடியவில்லை. அவ்வாறிருக்கையில், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக மாத்திரம் 2029ஆம் ஆண்டில் மீண்டும் ராஜபக்‌ஷ ஆட்சியை இந்த நாட்டுக்கு கொண்டுவருவதை எவராலும் தடுக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி சுட்டிக்காட்டினார். கொழும்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தற்போது ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சேர்ந்த பல […]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாலும் ராஜபக்‌ஷ அரசியலை நிறுத்த முடியவில்லை. அவ்வாறிருக்கையில், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக மாத்திரம் 2029ஆம் ஆண்டில் மீண்டும் ராஜபக்‌ஷ ஆட்சியை இந்த நாட்டுக்கு கொண்டுவருவதை எவராலும் தடுக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தற்போது ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சேர்ந்த பல முக்கியஸ்தர்கள் சிறையில் அடைக்கப்பட்டும், பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டும் வருகின்றனர். 2025 மற்றும் 2026 காலப்பகுதியில் வெறுப்பு, கோபம் மற்றும் பழிவாங்கும் நோக்கத்துடன் அரசாங்கம் முன்வைக்கும் சவால்களுக்கு ராஜபக்‌ஷ குடும்பம் வலுவாக முகங்கொடுத்து வருகிறது. விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு ராஜபக்‌ஷ குடும்பம் எடுத்த தீர்மானத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய சவால்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அவற்றையும் வெற்றிகொள்வோம்.

1988 – 1989 காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி பாரிய அரச அடக்குமுறையை எதிர்கொண்டது. அதன் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர், காணாமல் போனார்கள், கடத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்காக அரசியல்வாதியாக நிபந்தனையின்றி குரல் கொடுத்தவர் மகிந்த ராஜபக்‌ஷ. காணாமல்போன இளைஞர்களின் பெற்றோர்களின் துயரத்துக்கு ஆறுதலாக இருந்தவர் ஷிரந்தி ராஜபக்‌ஷ.

அந்த வரலாற்றை மக்கள் மறக்கக்கூடாது. அன்று மக்கள் விடுதலை முன்னணி எதிர்கொண்ட நிலைமைகளையும் இன்றைய நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். பழிவாங்குதல், கோபம், வெறுப்பு ஆகியவற்றால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அடுத்த கருத்துக்கணிப்பு அறிக்கையில் அரசாங்கத்தின் மீதான மக்களின் ஆதரவு மேலும் குறையும்.

எத்தகைய சவால்கள் வந்தாலும் எமது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது. 2029ஆம் ஆண்டில் மீண்டும் ராஜபக்‌ஷ ஆட்சியை கொண்டுவருவோம். பாராளுமன்றத்தில் 159 உறுப்பினர்கள் இருப்பதாலோ நிறைவேற்று அதிகாரம் இருப்பதாலோ எம்மை தடுக்க முடியாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தாண்டிய இராணுவ வலிமையைக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரனாலும் கூட ராஜபக்‌ஷ அரசியலை நிறுத்த முடியவில்லை. எனவே, எந்த அதிகாரத்தாலும் 2029இல் ராஜபக்‌ஷ ஆட்சியை மீண்டும் கொண்டுவருவதை தடுக்க முடியாது என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.