தவெக இடைத்தேர்தல் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் முக்கிய தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து விசிகவின் மூத்த தலைவரும், சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னி அரசு விளக்கமளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையை அடுத்த கொடுக்கூர் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த ஏ.குமாரமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை அமைச்சர் வன்னி அரசு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காலை உணவுத் திட்டம்:
“தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதன் மூலம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 15.30 லட்சம் ஏழை மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் சர்ச்சை:
தவெக இடைத்தேர்தலுக்கான நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டபோது, அதில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் வெளியிட்டதற்குப் பதிலாக ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி நட்சத்திரப் பேச்சாளர்கள்’ என வெளியிட்டிருக்க வேண்டும். அதனால் தான் முக்கிய அரசியல் தலைவர்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டது. மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணி என்ற பெயரில் மீண்டும் புதிய நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் மிக விரைவில் வெளியிடப்படும்.
திருமாவளவனை முதல்வராக்குவதே இலக்கு:
அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தங்களது தலைவரை முதல்வராக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பது இயல்பு. அதேபோல எங்களது கனவும், இலக்கும் விசிக தலைவர் தொல்.திருமாவளவனைத் தமிழக முதல்வராக்குவதுதான்\” என்று அமைச்சர் வன்னி அரசு அதிரடியாகத் தெரிவித்தார்.


