Some Populer Post

  • Home  
  • அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
- Sri Lanka

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் நோக்குடன், 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது கோரிக்கைகளை முன்வைத்தும் நாடளாவிய ரீதியில் உள்ள அரச அலுவலகங்களுக்கு முன்பாக இன்று (23) பாரிய கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் உள்ளிட்ட 16 இற்கும் மேற்பட்ட அரச தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் மன்னார், மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் பெருமளவிலான அரச ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு […]

அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் நோக்குடன், 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது கோரிக்கைகளை முன்வைத்தும் நாடளாவிய ரீதியில் உள்ள அரச அலுவலகங்களுக்கு முன்பாக இன்று (23) பாரிய கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் உள்ளிட்ட 16 இற்கும் மேற்பட்ட அரச தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் மன்னார், மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் பெருமளவிலான அரச ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று மதிய நேர இடைவேளையின் போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் இணைத்தலைவர் லோ. தீபாகரன் தலைமையில், பொதுமக்களின் அன்றாடச் சேவைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் சுமார் 15 நிமிடங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது. இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் நூற்றுக்கணக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகப் பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய தினத்தை ‘தேசிய எதிர்ப்பு தினமாக’ பிரகடனப்படுத்தி, நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாகப் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்திற்கும் 2026 வரவு செலவுத் திட்டத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற இப்போராட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “இடைக்காலக் கொடுப்பனவாக 25,000 ரூபாய் வழங்கு”, “கல்வித் தரத்திற்கேற்ப சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வினை வழங்கு”, “05 வருடங்களில் பதவி உயர்வு வழங்கு”, “வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு ஏற்ப சம்பள உயர்வை வழங்கு”, “பொருட்களின் விலைவாசியைக் குறைத்திடு” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

அத்துடன், அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பள அளவுத்திட்டத்தை MN-4 நிலையிலிருந்து MN-5 ஆக உயர்த்துவதுடன், விசேட பதவி உயர்வின் ஊடாக MN-7 சம்பள வகைக்குள் உள்வாங்கும் வகையில் சேவைப் பிரமாணக் குறிப்பு திருத்தப்பட வேண்டும் எனவும், வரவு செலவுத் திட்டத்தில் பிரயாணக் கொடுப்பனவுகள் தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள முரண்பாடுகளைக் களைந்து உரிய நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், தாம் கேட்பது சலுகைகள் அல்ல, சாதாரண மனிதனாக வாழ்வதற்கான ஜீவனோபாய உரிமை எனவும் தொழிற்சங்கத் தரப்பினர் சுட்டிக்காட்டினர்.

 

இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்திற்குப் பின்னரும் அரசாங்கம் தமது கோரிக்கைகளைக் கவனத்தில் கொள்ளத் தவறினால், எதிர்வரும் 30 ஆம் திகதி நாடு பூராகவும் பாரியளவிலான சுகயீன விடுமுறைப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Tami Global News @2026. All Rights Reserved.