செம்மணியில் நூற்றுக்கணக்கான மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டது வெறும் தொல்பொருள் அல்லது தடயவியல் நிகழ்வல்ல. அது ஒரு சாத்தியமான குற்றவியல் நிகழ்வாகும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழி குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பலவந்தமாக காணாமலாக்கப்படும் குற்றமானது ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதற்காகவே முன்னெடுக்கப்படுகின்றது.இது ஒரு நபரை சட்டத்தின் பாதுகாப்பிலிருந்து அகற்றுவதோடு அவர்களின் விதியையும் இருப்பிடத்தையும் மறைக்கின்றது.
அதேநேரத்தில் குடும்பங்கள்வாழ்வின் நிச்சயமற்ற தன்மை மரணத்தின் இறுதிதன்மை மற்றும் மிக முக்கியமாக துக்கம் அனுசரிக்கும் தன்மை ஆகியவற்றை பெற முடியாமல் மறுக்கப்படுவதால் இது அவர்கள் மீது தொடர்ச்சியான உளவியல் சித்திரவதையை திணிக்கின்றது.
இலங்கையில் தமிழ் குடும்பங்களை சேர்ந்தவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்ட தங்கள் குடும்பத்தவர்களை தேடி பத்தாண்டுகளுக்கும் மேல் அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.தாய்மார்களும் ஏனைய உறவினர்களும் புகைப்படங்களை ஏந்தியபடி ஒரு அரசாங்க அலுவலகத்திலிருந்து ஏனைய அரசாங்க அலுவலகத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் ஆணைக்குழுக்களின் முன் சாட்சியமளித்துள்ளனர்.முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளனர்.மேலும் தொடர்ச்சியான வீதிப்போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.பலர் எந்த பதிலும் கிடைக்காமலே உயிரிழந்துவிட்டனர்.
அவர்களின் கோரிக்கை எப்போதும் இலகுவான ஒன்றாகவே இருந்துள்ளது. அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது? அதற்கு யார் பொறுப்பு?
எனவே செம்மணி விவகாரத்தை இந்த வரலாற்று பின்னணியிலேயே புரிந்துகொள்ளவேண்டும்.
செம்மணியில் நூற்றுக்கணக்கான மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டது வெறும் தொல்பொருள் அல்லது தடயவியல் நிகழ்வல்ல. அது ஒரு சாத்தியமான குற்றவியல் நிகழ்வாகும்.
மேலும் உடல்கள் புதைக்கப்பட்டதாக தோன்றும் விதம்- அதில் பெருமளவு உடல்கள் ஆடைகள் இன்றி கண்டெடுக்கப்பட்டதாக கூறும் அறிக்கைகள் உட்பட இந்த நபர்கள் இறந்த சூழ்நிலைகள் மற்றும் அவர்களின் இறப்புகளை மறைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து ஆழமான கவலையளிக்கும் கேள்விகளை எழுப்புகின்றது.
காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களை பொறுத்தவரை தோண்டப்படும் ஒவ்வொரு மனித புதைகுழியும் நம்பிக்கையையும் அதேவேளை கடும் வேதனையையும் தருகின்றது. இறுதியாக இந்த எச்சங்கள் ஒரு பதிலை தரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
ஆனால் பல தசாப்தங்களாக குடும்பங்கள் அஞ்சிய உண்மை இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுவிடுமோ என்ற பயங்கரமான சாத்தியக்கூறும் இதில் உள்ளது.
இதன் காரணமாக செம்மணி மனித புதைகுழி அகழ்வு என்பது வெறும் எலும்புகளை மீட்பது மற்றும் எண்ணிக்கையுடன் சுருங்கிவிடக்கூடாது என்பதைஉறுதி செய்யவேண்டும் என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.


